மாதவிடாய் சுகாதாரத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ‘பத்மஸ்ரீ’ அருணாச்சலம் முருகானந்தம், கவிஞர் பா. விஜய் மற்றும் தாரா கிரியேஷன்ஸ் சுதிர் மகளிர் நலனுக்காக ஒன்றிணையும் புதிய முன்னெடுப்பு
முழுமையான மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்ச்சியை உருவாக்கும் உணர்ச்சிப்பூர்வ பாடல்
பெண்கள் நலன் மேம்பட்டால் தான் ஒட்டுமொத்த சமுதாயமே முன்னேறும் என்ற உன்னத நோக்கத்தில் எண்ணற்ற சவால்களையும், தடைகளையும் வெற்றிகரமாகத் தாண்டி மிகக் குறைந்த விலையில் சானிடரி பேடுகளை தயாரிக்கும் இயந்திரங்களை உருவாக்கி பெண்களின் மாதவிடாய் சுகாதாரத்தை மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை கணிசமாக அதிகரித்து மத்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருதை பெற்றவர் தமிழ்நாட்டை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம்.
மாதவிடாய் காலங்களில் துணிகளை பயன்படுத்தும் சுகாதாரமற்ற முறையை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்த அருணாச்சலம் முருகானந்தத்தின் வாழ்க்கை கதை பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ‘பேட்மேன்’ என்ற படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போது, மாதவிடாய் குறித்து மூட நம்பிக்கைகளை தகர்த்து, முழுமையான மாதவிடாய் சுகாதாரத்தை பேணுதல் குறித்து விழிப்புணர்வை உருவாக்க தனது அடுத்த லட்சிய பயணத்தின் முக்கிய பகுதியாக இது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்குவதற்காக பிரபல கவிஞர் பா. விஜய்யுடன் அருணாச்சலம் முருகானந்தம் இணைந்துள்ளார்.
இந்த பாடல் குறித்து அறிவிப்பு பெண்கள் சமத்துவ நாளான இன்று (ஆகஸ்ட் 26) வெளியிடப்பட்டது. இது குறித்து பேசிய.அருணாச்சலம் முருகானந்தம், “மாதவிடாய் மற்றும் கருப்பை சுகாதாரம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி மிகப் பெரிய அளவில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி வந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று ஒரு தொய்வை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் முழுமூச்சாக இதில் நாங்கள் இறங்கி உள்ள நிலையில் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் இந்த பாடலை உருவாக்க உள்ளோம்,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்தப் பாடலை உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மொழிகளில் இப்பாடல் வெளியிடப்படும். பெண்களின் சுகாதாரத்தை பாதுகாக்க பெண்கள் சமத்துவ நாளான இன்று உறுதி ஏற்கிறோம்,” என்று கூறினார்.
துபாயை தலைமையிடமாக கொண்ட இந்திய தொழிலதிபரும் முதலீட்டாளருமான தாரா கிரியேஷன்ஸ் சுதிர் இதை தயாரிக்கிறார். அவர் பேசுகையில் உலகம் முழுவதும் உள்ள அனைத்து பெண்களுக்கும். இந்த படைப்பை நாங்கள் அர்பணிக்கிறோம்—
பா. விஜய் இந்த பாடலின் தமிழ் வரிகளை எழுதுகிறார், இதன் முதன்மை ஆலோசகர் அவினாசி ஜோதி லிங்கம் ஆவார்