ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

87
Vairamuthu received the Jnanpith Award
Vairamuthu received the Jnanpith Award

ஞானபீட விருது பெற்றார் கவிஞர் வைரமுத்து

இலக்கியத்துக்கு பல்கலைக்கழகம் வேண்டும் ஏற்புரையில் கோரிக்கை

In-article leaderboard

இந்தியாவில் இலக்கியத்துக்கு உயர்ந்தபட்சமாக வழங்கப்படும் ஞானபீட விருது இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் மொழி பெற்றிருக்கும் மூன்றாவது ஞானபீட விருது இதுவாகும்.

ஜூலை 13 டெல்லியில் நடந்த விழாவில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் டாக்டர் கரண் சிங் விருதை வழங்கினார். ஞானபீட அமைப்பைச் சேர்ந்த சாகு அகிலேஷ் ஜெயின், ஸ்ரீ முதத் ஜெயின், பிரதீபா ராய், ஆர்.என்.திவாரி ஆகியோர் மேடையில் இருந்தனர். விருதைப் பெற்றுக்கொண்டு கவிஞர் வைரமுத்து ஏற்புரை ஆற்றினார்:

“தமிழ்நாட்டின் தென்மேற்கு மூலையில், இந்தியாவின் வரைபடத்திற்குச் சிக்காத ஒரு கடைக் கோடியில், 60 வீடுகளே கொண்ட மெட்டூர் என்ற சிற்றூரில் ஒரு விவசாயக் குடும்பத்தில் நான் பிறந்தேன். 1950களில் வைகை நதியின் குறுக்கே வைகை அணை கட்டப்பட்டது; அதன் நீர்தேங்கும் பரப்புக்காக 14 கிராமங்கள் காலிசெய்யப்பட்டன. அதில் ஒன்றுதான் நான் பிறந்த ஊர்.

இடுப்புவரை மூழ்கிய ஊர் கழுத்துவரை மூழ்கத் தலைப்படும்போது, அந்த கிராமத்தின் தாயொருத்தி உலர்ந்த கண்ணீரோடும் நனைந்த சேலையோடும் கதறிக்கொண்டே கரையேறுகிறாள். அவள் இடுப்பில் ஒரு பெண் குழந்தை, கைப்பிடியில் ஓர் ஆண் குழந்தை. அப்போதெல்லாம் அவளுக்குத் தெரியாது இடுப்பில் உள்ள பெண்குழந்தை அடுத்த ஆறு மாதத்தில் இறந்துபோகும் என்றும், கைப்பிடியாய்க் கூட்டிவந்த ஆண்குழந்தை அடுத்த எழுபது ஆண்டுகளில் ‘ஞானபீட விருது’ பெறும் என்றும். அன்று கால்சட்டை நனைய நனையக் கரைசேர்ந்த சிறுவன்தான் இன்று இந்த ஞானபீட மேடையில் உங்கள் முன் நிற்கிறான்; அவன் பெயர் வைரமுத்து.

பிழைக்கவந்த வடுகபட்டியில் வகுப்பு அவனுக்கு எழுத்துக்களைச் சொல்லிக்கொடுத்தது; வறுமை அவனுக்கு வாழ்க்கையைச் சொல்லிக்கொடுத்தது. இரண்டும் அவனைக் கையோடு கூட்டிவந்து கவிதையிடம் சேர்த்தன.

நல்லது காண்பது இலக்கியம்; நம்பிக்கையூட்டுவது இலக்கியம். “விரும்பியது அமையாவிட்டால் அமைந்ததை விரும்பு” என்கிறது உபநிஷத். அமைந்ததை விரும்பாவிட்டால் விரும்பியதை அமை என்கிறது இலக்கியம்

இது 60ஆம் ஞானபீடம்.

என் அரைநூற்றாண்டு எழுத்துக்களைப் பாராட்டி ஞானபீடம் 60 கிராம் அமிர்தப் புட்டி வழங்கியிருக்கிறது. இது எனக்கு மட்டுமே சொந்தம் என்று உரிமைகொள்ள முடியாது. ஒரு கிராம் திருவள்ளுவருக்கு, ஒரு கிராம் இளங்கோவடிகளுக்கு, ஒரு கிராம் கம்பருக்கு, பாரதிக்கு, பாரதிதாசனுக்கு, அண்ணா, கலைஞர், கண்ணதாசனுக்கு ஆளுக்கொரு சொட்டு. அவர்களுக்கு மட்டுமா? காளிதாசனுக்கு ஒருசொட்டு, வேதவியாசருக்கு ஒரு சொட்டு. வால்மீகிக்கு ஒரு சொட்டு, தாகூருக்கு, ஷேக்ஸ்பியருக்கு, ஃபிர்தெளசிக்கு, மில்டனுக்கு. ஷெல்லி, பைரன், கீட்ஸூக்கு, டி.எஸ்.எலியட்டுக்கு, எஸ்ராபவுண்டுக்கு கடைசியாய் ஒரு சொட்டு கலீல் ஜிப்ரானுக்கு இப்படிப் பகிர்ந்து கொடுத்ததுபோகக் கரண்டியில் ஒட்டியிருக்கும் ஈரப்பசை மட்டும் என் பங்கு ஆகலாம்.

இந்த விருது என்னை ஒரு சாய்வு நாற்காலியில் சாய்த்துவிடாது. இது ஓடிவந்த குதிரைக்கு நீட்டப்படும் புல் அல்ல; குதிரை மீது விழுந்த மற்றுமொரு சாட்டையடி. குதிரை இன்னும் வேகமெடுக்கும்; நான் வெறிகொண்டு ஓடுவேன். இந்த விருதுக்கு என் தமிழ் இன்னும் நியாயம் செய்யும்.

எனக்குச் சில கேள்விகள் உண்டு.

இலக்கியத்துக்காக இந்தியா ஒரே ஒரு நோபல் பரிசு பெற்று 113 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதன்பிறகு நோபல் பரிசு பெறத் தகுதியான ஒரு படைப்பாளியை இந்தியா தயாரிக்கவில்லையா? அல்லது நோபல் குழு கண்டுபிடிக்கவில்லையா? ஏகப்பட்ட உலக அழகிகளைத் தயாரித்த இந்தியா உலகக் கவிகளைத் தயாரிக்க மறந்ததா?

ஒவ்வொரு தொழில்நுட்பத்துக்கும் ஒவ்வொரு பல்கலைக்கழகம் காணும் நாம், இலக்கியத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவக் கூடாதா? அது எப்போது?

இந்தக் கேள்விகளோடு என் ஏற்புரையை நிறைவுசெய்கிறேன். இந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திய ஒவ்வொரு சமூக மனிதனுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்”

என்று பேசினார்.

 

Foot Note:

டெல்லியில் நடந்த விழாவில் 60ஆவது ஞானபீட விருது, கவிஞர் வைரமுத்துவுக்கு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் கரண்சிங் விருது வழங்கினார். ஞானபீடத்தின் நிர்வாக அறங்காவலர் அகிலேஷ் ஜெயின், தேர்வுக்குழுத் தலைவர் டாக்டர் பிரதிபா ராய் மற்றும் நிர்வாகிகள் உடனிருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here